பொது விபத்தில் படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

செய்யூர், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 53. அணைக்கட்டு காவல் நிலையத்தில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஜன., 19ம் தேதி இரவு பணி முடிந்து, தன் 'யுனிகார்ன்' இருசக்கர வாகனத்தில், பவுஞ்சூரில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.

செய்யூர் அருகே சென்ற போது, புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 40, என்பவர் ஓட்டிவந்த, 'டாடா மேஜிக்' சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குமார் படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, செய்யூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை, மணப்பாக்கம் பகுதியில் செயல்படும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 6:30 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement