சொத்து வரி, குடிநீர் வரி சேர்த்து வசூலிப்பு இனி ஒரே வரி
சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் தனித்தனியாக வரி வசூலிப்பதால், நிர்வாக செலவு அதிகரிப்பதோடு, வசூலிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், சொத்து வரியோடு, குடிநீர் வரியையும் சேர்த்து மாநகராட்சியே வசூலிக்கும் நடைமுறையை, அக்., 1 முதல் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு, ஆண்டு வாடகை வருவாய் அடிப்படையில், 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இதில், 23 சதவீதம் மாநகராட்சிக்கு சொத்து வரியாகவும், 7 சதவீதத்தை குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் வரியாகவும் விதிக்கப்படும்.
இந்த கட்டணத்தை இரண்டாக பிரித்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
அந்த வகையில், மாநகராட்சியில், 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் வரியாக, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், குடிநீர் வாரியத்தில், 16.80 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதற்கு, வரி மற்றும் கட்டணமாக, ஆண்டுக்கு, 900 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் அக்டோபரில் நிலுவை இல்லாமல் வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மாநகராட்சியில், ஆண்டுக்கணக்கில் வரி செலுத்தாதோருக்கு, 'நோட்டீஸ்' வழங்குவதுடன், 'சீல்' வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், குடிநீர் வாரியத்தில் பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள, வரி, கட்டணத்தை வசூலிக்க, ஒரு துணை கலெக்டர் தலைமையில், ஏழு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், சீல், ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
மாநகராட்சி, குடிநீர் வாரியம் வசூலிக்கும் வரி பணத்தில் இருந்து, ஊதியம், சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.
குடிநீர் வாரியத்தில் வரி வசூலிக்க, தலைமை அலுவலக நிர்வாக அதிகாரி முதல் வரி வசூலிப்பாளர் மற்றும் தாசில்தார் வரை, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
வரி வசூலில் குறிப்பிட்ட தொகை, இவர்களுக்கு ஊதியமாக செல்வதால், சிக்கன நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் வாரிய குடிநீர் வரியை சேர்த்து, ஒரே வரியாக வசூலிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
நடப்பு 2025 - 26ம் நிதியாண்டில், இரண்டாம் அரையாண்டு துவக்கமான, அக்., 1 முதல் நடைமுறைக்கு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கட்டடத்தின் மாநகராட்சி வரி, குடிநீர் வரி விதிப்புக்கான சொத்து மதிப்பை மாநகராட்சி நிர்ணயம் செய்கிறது. இதன்படி, 30 சதவீத வரியில், வாரியம் 7 சதவீதம் வசூலிக்கிறது.
இந்த வரியை பொதுமக்களிடம் இருந்து வசூலிப்பதில் பெரிய போராட்டமாக இருக்கிறது.
இதனால், 30 சதவீத வரியை மாநகராட்சி வசூலித்து, அதில், 7 சதவீதத்தை வாரியத்திற்கு வழங்கும் வகையில், மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், வாரியத்தின் செலவுகள் குறையும். குடிநீர் கட்டணத்தை மட்டும் வாரியம் வசூலிக்கும்.
வரி வசூலில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களுக்கு மாற்று பணி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரி, குடிநீர் வரியை இணைத்து, ஒரே வரியாக வசூலிக்கும்போது ஏற்படும் சாதகம், பாதகம், சீல், ஜப்தி நடவடிக்கையில், இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பல ஆண்டுகள் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்க, வாரியம் தனியாக தாசில்தார்கள் கொண்ட குழு அமைத்துள்ளது. மாநகராட்சியில் அதுபோல் இல்லை. நிலுவை தொகையை வசூலிக்க, சுதந்திரமாக செயல்படும் அதிகாரிகள் குழு இருந்தால், ஒரே வரியாக வசூலிப்பது சாத்தியம்.- மாநகராட்சி அதிகாரிகள்
* பாதகம்1. இரு துறைகளுக்கும் தனித்தனி காசோலை அல்லது வரைவோலை வழங்க வேண்டும் 'ஆன்லைன்' வழியாக செலுத்தும்போதும் தனித்தனியாக கட்டணம் தரப்படுகிறது.2. வரி செலுத்திய பணம் வரவில் சேராதது, வசூலில் குளறுபடி போன்ற புகார்களுக்கு, இரண்டு அலுவலகத்திற்கும் தனித்தனியாக செல்லும் நிலை உள்ளது3. வங்கி கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக, மாநகராட்சிக்கு வரி செலுத்தி, குடிநீர் வரியை செலுத்தாமல் பலர் ஏமாற்றி வருவது தடுக்கப்படும்4. வரி செலுத்த வேண்டிய தகவலை, இரு துறைகளும் தனித்தனியாக நினைவூட்டல் கடிதம், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'வாட்ஸாப்' செய்தி வழியாக தகவல் பரிமாறுகிறது * சாதகம்1. ஒரே வரியாக செலுத்தும்போது, வங்கி பரிவர்த்தனை கட்டணம் குறையும்; காகித செலவு, ரீஜார்ட் செலவு குறையும்2. மாநகராட்சியை அணுகி தீர்வு காணலாம்3. முறையாக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்; நிலுவை தொகை எளிதாக வசூலாகும்* பாதகம்5. தங்களின் நிதி நிலைக்கேற்ப சொத்து வரியை முதலிலும், குடிநீர் வரியை அதன்பிறகும் செலுத்தும் நிலை இனி தொடர முடியாது.
- நமது நிருபர் -
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!