திருவள்ளுவர் கோவில் கட்டுவது எப்போது? திருவொற்றியூர்வாசிகள் அரசிற்கு கேள்வி

திருவொற்றியூர், திருவொற்றியூரில், திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்படும் என அறிவித்து ஓராண்டான நிலையில், பணிகள் துவங்கப்படாதது குறித்து, சமூக நல அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருவொற்றியூர், தேரடி, ஈசானிமூர்த்தி கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் மற்றும் வாசுகிக்கு தனி கோவில்கள் இருந்துள்ளன. நாளடைவில் கோவில் சிதிலமடைந்து விட்டது.

இந்நிலையில், திருவள்ளுவருக்கு கோவில் கட்டியெழுப்ப வேண்டும் என, பாரதி பாசறை உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை 2024 - 25ல், திருக்கோவில்கள் மீட்டுருவாக்குதல் என்ற தலைப்பில், 81வது அறிவிப்பாக, திருவொற்றியூரில், 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்படும் என அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு வெளியாகி ஓராண்டுகள் கடந்த நிலையில், கோவில் கட்டுவதற்கான எந்த பணியும் துவங்கியதாக தெரியவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, திருவள்ளுவர் கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement