பஸ் நிலையம் இல்லாத மாங்காடு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்

குன்றத்துார், மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து வழிபாடு செய்கின்றனர்.

மாங்காட்டை சுற்றி, ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள பலர் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், மாங்காட்டில் பேருந்து நிலையம் இல்லை. இதனால், பேருந்துகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

தாம்பரம், பல்லாவரம், குன்றத்துாரில் இருந்து பூந்தமல்லி, ஆவடி செல்லும் போருந்துகள், சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதனால், மாங்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

இதற்கு தீர்வாக, குன்றத்துார் - -குமணன்சாவடி சாலையில், காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவானது.

ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்புதல் பெற்று, இந்நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து, நகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது.

ஆனால், இதுவரை பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. நிலத்தை கையகப்படுத்தி, மாங்காட்டில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, மாங்காடு நகராட்சி அதிகாரி கூறியதாவது:

பேருந்து நிலையம் கட்டுவதற்கு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலத்தை நகராட்சிக்கு இலவசமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பேருந்து நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதியாக, கோவிலுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை, 10 லட்சம் ரூபாய் செலுத்தி, நகராட்சி பெயரில் வாங்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஒப்புதல் கிடைத்த பின், விரைவில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement