போஜராஜ நகர் சுரங்க பாதையில் தேங்கிய கழிவு நீரால் தொற்று அபாயம்

வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கண்ணன் தெருவிற்கும், மின்ட் மார்டன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இந்த தண்டவாளம் வழியாக 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே 'கேட்' மூடப்படுகிறது. இதனால், 'பீக் ஹவர்' வேளைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 2010ல் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில், திடீரென கிடப்பில் போடப்பட்டது. பின் 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மீண்டும் பணி துவங்கி பாதியில் நின்றது.
இதையடுத்து, 2018ல் துவங்கிய பணி, கொரானா காலக்கட்டத்தில் மீண்டும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், 2022 அக்டோபரில் துவங்கின. சுரங்கப்பாதைக்கு அமையும் இடத்தின் கீழே செல்லும், 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் எண்ணெய் குழாய்கள், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மழைநீர் வடிகால் பணிகளும், புதை மின் வடம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஒருபுறம் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், மற்றொருபுறம் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதில், கழிவுநீர் குழாய்கள் உடைந்து, சுரங்கப்பாதையில் குளம் போல் கழிவுநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாள்களாக தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதியில் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மின்ட் மார்டன் சிட்டி, போஜராஜன் நகர், சீனிவாசபுரம் மக்கள் கூறியதாவது:
சுரங்க பாதைகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மூன்று மாதத்தில் முடிப்போம் என பொய் வார்த்தைகளை கூறி, 14 ஆண்டுகளாக சுரங்கப்பாதை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய சுரங்கப்பாதை கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், கழிவுநீர் குழாய் உடைந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லை அதிகரித்துள்ளது. சிறுவர்கள் அதிகளவில் இப்பகுதியில் விளையாடுவதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கழிவுநீரை அகற்றி, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!