திடீர் நகர் குடியிருப்பு திட்டம் பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு

சென்னை, 'புரசைவாக்கம், திடீர் நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம், பல ஆய்வுகளுக்குப் பிறகும், செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கை தேவை' என, தே.மு.தி.க., பொதுச் செலயர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புரசைவாக்கம், திடீர் நகர் திட்ட குடிசைப் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதியின்றி வசிக்கின்றனர்.

இம்மக்கள் பயனடையும் வகையில், இங்கு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதுத் தொடர்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சட்டசபையில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்றைய முதல்வர், 'பரிசீலனைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தொடர்ந்து குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக, அம்மக்களிடம் நேரில் பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 'பயோ மெட்ரிக் சர்வே' எடுக்கப்பட்டது.

மேலும், இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.

அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில், ஆய்வு நடத்தப்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement