டி.என்.டி., ஜாதி சான்றிதழ் வழங்காத தமிழக அரசுஓசூரில் 68 சமூக மக்கள் சார்பில் ஒட்டிய போஸ்டர்


டி.என்.டி., ஜாதி சான்றிதழ் வழங்காத தமிழக அரசுஓசூரில் 68 சமூக மக்கள் சார்பில் ஒட்டிய போஸ்டர்



ஓசூர்:தமிழகத்தில் வசிக்கும் பிரமலை கள்ளர், மறவர், தொட்டிய நாயக்கர், ஊராலி கவுண்டர், வேட்டுவ கவுண்டர், போயர், முத்தரையர் உட்பட, 68 சமூகத்தினர், சீர்மரபு பூர்வீக பழங்குடியினர் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு அரசின் மூலம், 1979க்கு முன்பு வரை, டி.என்.டி., என்ற ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை மாற்றி டி.என்.சி., என ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சலுகைகளை பெற, டி.என்.சி., ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்படி ஒரே சமூகத்திற்கு இரட்டை சான்றிதழ் வழங்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சீர்மரபு மக்களுக்கு, இரட்டை ஜாதி சான்றிதழ் முறையை ஒழிப்போம்' என்றார். பின், 2024 பார்லிமென்ட் தேர்தலில் இப்பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில், 'சீர்மரபினருக்கு ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதனால் தங்களுக்கு டி.என்.டி., என்ற ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என சீர்மரபினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஒரே ஜாதி சான்றிதழில், டி.என்.டி., - டி.என்.சி., என குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஏமாற்றம் அடைந்ததால், சீர்மரபினர் மக்கள் முன்னேற்ற கழகம் (டி.என்.டி) சார்பில் ஓசூர் நகரில், தமிழக அரசு, 68 சமூகத்திற்கும் எதிராக செயல்படுவதாக கூறி, போஸ்டர் ஒட்டி உள்ளனர். 'ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்காததால், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க.,வை வீழ்த்தினோம். கடந்தாண்டு மார்ச், 16ல், ஒற்றை சான்றிதழ் வழங்கப்படும் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதி என்னாச்சு' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement