தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் பலி, சிறுமி காயம்

ராய்ச்சூர்: கர்நாடகாவில், தெருநாய்கள் கடித்ததில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் ஒன்பது வயது சிறுமி காயமடைந்தார்.

கர்நாடகாவின் ராய்ச்சூர், கசாபா லிங்கசுகூர் கிராமத்தைச் சேர்ந்த, 6 வயது சிறுவன் சிட்டப்பா பீரப்பா, கடந்த மாதம் 29ம் தேதி மாலை, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். சாலையில் இருந்த தெருநாய்கள் சிறுவனை கடிக்க முயற்சித்தன.

பீதியடைந்த சிட்டப்பா பீரப்பா ஓடத் துவங்கினான். நாய்கள் சிறுவனை விரட்டி விரட்டி கடித்துக் குதறின. இதில், சிறுவனின் உடல் முழுதும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

இதை பார்த்தவர்கள், நாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை காப்பாற்றினர். பாகல்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவத்திற்கு நகராட்சி அதிகாரிகளே காரணம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக புகார் அளித்தால், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், ராய்ச்சூர், மார்ச்செட்டாலா கிராமத்தைச் சேர்ந்த சைத்ரா என்ற, 9 வயது சிறுமியை நேற்று தெருநாய் கடித்துக் குதறியது. இதில், சிறுமியின் தலை, காது, கால்களில் காயம் ஏற்பட்டது. தற்போது, சிறுமி ராய்ச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இரண்டு சம்பவங்கள் ராய்ச்சூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement