அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 81 வாகனம் பறிமுதல்


அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 81 வாகனம் பறிமுதல்


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து சென்ற, 81 வாகனங்களை பறிமுதல் செய்தும், 2 கிரஷர்களுக்கு, 'சீல்' வைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கனிம வளம் மற்றும் மணல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் உரிய நடைச்சீட்டு மற்றும் 50 சதவீத பசுமை வரி செலுத்தாமல் கர்நாடகாவிற்கு கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டது.
இதற்காக வருவாய் துறை, போலீஸ், கனிமவளத்துறை அலுவலர்கள் அடங்கிய, 8 குழுக்களும், ஓசூர் சப் கலெக்டர், ஆர்.ஐ.,க்கள் தலைமையில், 11 குழுக்களும் அமைக்கப்பட்டன. அவர்கள் கடந்த பிப்.,4 முதல் மார்ச், 27 வரை தணிக்கை மேற்கொண்டனர். இதில், 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், 7 இடங்களில் அனுமதியின்றி கறுப்பு கிரானைட் வெட்டி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மாசு கட்டுப்பாட்டுவாரியம், சேமிப்பு கிடங்கு அனுமதி பெறாமலும், குத்தகை காலம் முடிந்தும் இயங்கிய, 2 கிரஷர்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், கனிம வள உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement