சித்தேரியில் வங்கி கிளை துவங்கமலைவாழ் மக்கள் கோரிக்கை



சித்தேரியில் வங்கி கிளை துவங்கமலைவாழ் மக்கள் கோரிக்கை


அரூர்:சித்தேரி மலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை துவங்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், மாங்கடை, ஜக்கம்பட்டி, கலசப்பாடி, மண்ணுார், நொச்சிக்குட்டை, குண்டல்மடுவு, சேலுார், அம்மாபாளையம் உள்ளிட்ட, 62 கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து, 3,600 அடி உயரத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி பஞ்.,ல், 16,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மலை கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. மேலும், இப்பகுதி மக்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். 62 மலை கிராம மக்களுக்கு சித்தேரி மையப்பகுதியாக உள்ளது.
சித்தேரி பஞ்.,ல், அதிகளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் எதுவும் இல்லை. இதனால், 25 கி.மீ., துாரத்திலுள்ள கீரைப்பட்டி மற்றும், 30 கி.மீ., துாரத்திலுள்ள அரூருக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், அரூருக்கு சென்று வருவதற்கு நேரம் மற்றும் பணம் விரயமாகிறது. இதை கருத்தில் கொண்டு சித்தேரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் துவங்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement