பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை

12


சண்டிகர்: பஞ்சாபில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பாதிரியார் பஜிந்தர் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள குளோரி அண்டு விஸ்டம் சர்ச்சின் பாதிரியாராக இருப்பவர், பஜிந்தர் சிங். இவரை, இன்ஸ்டாகிராம், யு டியூப் போன்ற சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். பஜிந்தர் சிங் மீது, 2018ம் ஆண்டு ஜலந்தர் போலீசில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.


இதன்படி, பஜிந்தர் சிங் மீது பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிரியார் பஜிந்தர் சிங் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. பாதிரியார் பஜிந்தர் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: அவர் (பஜிந்தர்) ஒரு மனநோயாளி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அதே குற்றத்தைச் செய்வார். எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதால், டி.ஜி.பி., எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.


ஏழு ஆண்டுகளாக போராடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றார். "இந்த வழக்கிற்காக நாங்கள் ஏழு ஆண்டுகள் போராடினோம். அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் பஜிந்தர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், என்றார்.

Advertisement