ஐ ஆம் ஜஸ்ட் 98

சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் அதன் முன்னாள் மருத்துவர் டாக்டர் சாந்தா நினைவு சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 98 வயதான டாக்டர் எம்.கே.சீனிவாசன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழாவிற்கு முன்னதாகவே வந்திருந்து முதல் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார்.
அவரது பெயரைச் சொல்லி அழைத்ததும், அவரால் மேடை ஏறமுடியாது என்று நினைத்து, அவரை கைத்தாங்கலாக அழைத்து செல்வதற்காக இரண்டு பேர் வந்தனர், அவர்களை ஏற இறங்கப்பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் 'உங்கள் உதவி தேவையில்லை நானே மேடைக்கு செல்வேன்' என்று சொல்லிவிட்டு யாருடைய உதவியும் இல்லாமல் மேடைக்கு சென்றார்.
அவர் பேசும் முறை வந்த போது, நீங்கள் சிரமப்பட்டு எழுந்திருக்க வேண்டாம் உட்கார்நதிருக்கும் இடத்தில் அப்படியே உட்கார்ந்தபடியே பேசலாம் என்று சொல்லி 'வயர்லெஸ் மைக்கினை' அவரிடம் கொடுத்தனர்.
என்னால் போடியத்தில் நின்று கொண்டு தாராளமாக பேசமுடியும், தயவு செய்து என்னை முடியாதவனாக்கிவிடாதீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்லியபடி எழுந்து நின்று பேசினார்.
அவர் என்ன பேசினார் என்பதை தெரிந்து கொள்வதற்கு அவரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
எளிய குடும்பத்தில் பிறந்தவர், மருத்துவ படிப்பை விரும்பி படித்தவர்,
கடந்த 51 ஆம் ஆண்டு அரசு மருத்துவராக பணியாற்றத்துவங்கினார்.சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என பெயரெடுத்தார்.
சிறது காலம் சென்ற பிறகு அவருக்கு வெளியூர் மாறுதல் வந்தது, வீட்டில் உள்ள வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதால் வெளியூர் செல்லாமல் அரசு மருத்துவப்பணியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தபடியே சிறிய கிளினிக் வைத்து செயல்பட்டு வந்தார்.
இவரது தரமான நேர்மையான சிகிச்சை காரணமாக சிவாஜி,ஜெயலலிதா உள்ளீட்ட பலருக்கும் குடும்ப மருத்துவராகவும் இருந்தார்.
சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான நீங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து ஏழை எளிய நோயாளிகளுக்கு அவ்வப்போது அறுவை சிகிச்சை செய்யும் கவுரவ டாக்டராக பணியாற்றவேண்டும் என்று மூத்த டாக்டர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், பல ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தார்.
எப்போதுமே பணத்தின் மீது நாட்டம் கொள்ளாத இவர், தனது குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வந்ததும் தனது மருத்துவ அறிவு முழுவதும் ஏழை எளியவர்களுக்கு பயன்படும் வகையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டர் என்று மருத்துவத்தை தொண்டாக நடத்தும் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இங்கு படிப்படியாக உயர்ந்து சென்டரையும் உயர்த்தினார் சில காலம் சென்ற பிறகு இவரே அந்த சென்டரின் இயக்குனராகவும் ஆனார்.
சமூகத்தில் உள்ள பலரையும் அணுகி சென்டருக்கு தேவையான நவீன மருத்து கருவிகள் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இவரது சேவை மனப்பான்மையை பாராட்டி அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது பாராட்டியுள்ளார்.
இந்த குறிப்புகளைத் தொடர்ந்து அவருக்கு மைசூர் தலைப்பாகை அணிவித்து பொன்னாடை போர்த்தி பலபட பாராட்டி மகிழ்ந்தனர், மொத்த பார்வையாளர் கூட்டமும் எழுந்து கைதட்டி மகிழ்ந்தது.
பின்னர் அவர் தெளிவாக பேசினார்,டாக்டராக இருப்பவர்கள் வரும் நோயாளிகளிடம் அன்பாக பேசினாலே பாதி நோய் பறந்துவிடும்,மருத்துவம் என்பது இறைவன் கொடுத்த ஆசீர்வாதம் அதை மனநிறைவோடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
-எல்.முருகராஜ்.

மேலும்
-
பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்
-
சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கோர்ட் தடை
-
அடுத்து என்ன செய்யப் போறீங்க... அமெரிக்க வரிவிதிப்பு குறித்து கேட்கிறார் ராகுல்