நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு

புதுடில்லி: '' வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை,'' என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசினார்.
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். பார்லிமென்ட் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துக்களை பெற்றனர்.
ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இம்மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.
திட்டங்களை அமல்படுத்தும்போது, மக்களின் நலனுக்கு தான் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் 70 ஆண்டுகள் வைத்து இருந்தது யார்? முத்தலாக் முறையை நிறுத்த பிரதமர் மோடிக்காக முஸ்லிம் பெண்கள் காத்து இருந்தனர். இந்த முறையை பலநாடுகள் நிறுத்திவிட்டன. எந்த கட்சியின் நலனுக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும் இம்மசோதா கொண்டு வரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியா வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளன. இந்தியாவும் ஏன் சீரமைக்கக்கூடாது. வக்ப் வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்படக்கூடாதா? இவ்வாறு நட்டா பேசினார்.



மேலும்
-
ஏப்.,9 ல் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்
-
தென்கொரிய அதிபர் யூன் சுக் லியோல் பதவி நீக்கம் உறுதி: 60 நாட்களில் புதிய தேர்தல்!
-
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
-
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு; அதே நாளில் ஜாமின்: இ.பி.எஸ்., காட்டம்!
-
'எம்புரான்' பட தயாரிப்பாளர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு