வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை: வழுவூரில் இன்று (ஏப்ரல் 04) வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேம் கோலாகலமாக நடந்தது.



மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளங்கிளை நாயகி சமேத கிர்த்திவாசர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல்கள் மற்றும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் ஏப் 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய 9:30 மணிக்கு அனைத்து விமான கலசங்களுக்கும் ஏக காலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் விமான கலசங்களின் மீது பல்வேறு வகையான மலர்கள் தூவப்பட்டன. பின்னர் மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன .



கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீன தம்பிரான்கள், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், இந்து புரட்சி முன்னணி மாவட்ட செயலாளர் ஜோதி குமரன், அரசு வக்கீல் ராம சேயோன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement