'கேரம் பால்' விஞ்ஞானி சாய் கிஷோர்

பெங்களூரு: சுழற்பந்துவீச்சில் புதுமையை புகுத்தியுள்ளார் சாய் கிஷோர். 'கேரம் பால்' முறையில் பந்துவீசி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.
பெங்களூருவில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் போட்டியில் பெங்களூருவை (20 ஓவர், 169/8), வென்றது குஜராத் (17.5 ஓவர், 170/2).
தமிழகம் ஆதிக்கம்: குஜராத்தை 'மினி தமிழக அணி' என வர்ணிக்கலாம். சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் என நம்மூர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் சுதர்சன் (3 போட்டி, 186 ரன், சராசரி 62.00, ஸ்டிரைக் ரேட் 157.62) அசத்துகிறார். பந்துவீச்சில் சாய் கிஷோர் (3 போட்டி, 6 விக்கெட்) மிரட்டுகிறார். பெங்களூருவுக்கு எதிராக 'கேரம் பால்' முறையில் பந்துவீசி வியக்க வைத்தார். 2016ல் நடந்த உள்ளூர் டி.என்.பி.எல்., போட்டியில் 20 வயதான கிஷோர், எதிரணி வீரர்களான ஜெதீசன், அஷ்வினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அஷ்வினுடன் மோத விரும்பினால், அவரை போல பந்துவீச வேண்டும் என சிலர் சொல்லியிருக்கின்றனர்.
'கேரம் பால்' எப்படிதற்போது 'ஸ்பின்' ஜாம்பவான் அஷ்வின் போல 'கேரம் பால்' யுக்தியை சரியாக கையாள்கிறார் கிஷோர். கிரிக்கெட் அரங்கில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் தான் முதலில் 'கேரம் பால்' வீசினார். அடுத்து அஷ்வின் அசத்தினார். இதில் விஞ்ஞானி போல நுணுக்கமாக பந்துவீச வேண்டும். கேரம் போட்டியில் வீரர்கள் 'காயினை' சுண்டி விடுவதற்கு நிகரானது. கட்டைவிரல், நடுவிரலை பயன்படுத்தி சொடக்கிடுவது போல பந்தை வீச வேண்டும். நடுவிரலின் 'கிரிப்பை' பொறுத்து, பந்து ஆப் அல்லது லெக் அல்லது நேராக சுழன்று செல்லும். பந்து வரும் திசையை பேட்டர் கணிப்பது கடினம். இதை 'சொடக்கு பந்து' என்று அஷ்வின் அழைத்தார்.
பாண்ட்யா பரிதாபம்பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் குர்ணால் பாண்ட்யாவுக்கு எதிராக 'கேரம் பால்' வீசினார் கிஷோர். அப்போது என்ன செய்வது என தெரியாமல் தடுமாறினார் பாண்ட்யா. ஏனெனில் இடது கை ஸ்பின்னர்கள் பொதுவாக கேரம் பால் வீசுவதில்லை. இறுதியில் பந்து 'எட்ஜ்' ஆகி நேரே பறந்து வர, கிஷோர் கச்சிதமாக பிடித்தார்.
இப்போட்டியில் அனுபவ ரஷித் கான் நான்கு ஓவரில் 54 ரன் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால், கிஷோர் 4 ஓவரில் 22 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் (ஜிதேஷ், குர்ணால்) வீழ்த்தினார். இவரது பந்துவீச்சு கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
பயிற்சிக்கு பரிசு
சாய் கிஷோர்: 'டி-20 போட்டியில் தாக்குப்பிடிக்க, ஏதாவது புதுமை செய்ய வேண்டும். கடந்த 3-4 ஆண்டுகளாக 'கேரம் பால்' முறையில் பயிற்சி செய்து வருகிறேன். பிரிமியர் போட்டியில் பயன்படுத்தினேன். நான் வீசியது 'கேரம் பால்' தான் என்று உள்ளூணர்வு சொன்னது. தொடர்ந்து இம்முறையில் பந்துவீசினேன்.
சுதர்சன்: களத்திற்கு வெளியே கடுமையாக பயிற்சி செய்வார் கிஷோர். இதனால் தான் மற்ற பவுலர்களில் இருந்து ஒரு படி முன்னே இருக்கிறார். போட்டியின் தன்மையை புரிந்து கொண்டு பந்துவீசுவது அவரது பலம்.
ஆகாஷ் சோப்ரா, இந்திய முன்னாள் வீரர்: வலது கை ஆப்-ஸ்பின்னர்கள் தான் 'கேரம் பால்' முறையில் பந்துவீசுவர். அப்போது வலது கை பேட்டர் அடிக்க முடியாத வகையில் பந்து விலகிச் செல்லும். இடது கை ஸ்பின்னர்களில் சாய் கிஷோர் போன்ற சிலர் தான் கேரம் பால் வீசுகின்றனர். இடது கை ஸ்பின்னர், இடது கை பேட்டருக்கு பந்துவீச கேப்டன்கள் அனுமதி தருவது கடினம். ஆனால், 'கேரம் பால்' வீசும் திறன் இருந்தால், நிச்சயம் வாய்ப்பு அளிப்பர்.
மேலும்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை