அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

10

சென்னை: கடந்த 2008 ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

2008 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு தமிழக வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியின் போது கடந்த 2013ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட்டின் மனைவி உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதன்படி ஐ. பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அமைச்சர் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஐ. பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைச்சர் என்பதால், வழக்கு தொடர கவர்னர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும்போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Advertisement