அடடே வெங்கடேஷ் 'சரவெடி' * கோல்கட்டா கலக்கல் வெற்றி

கோல்கட்டா: வெங்கடேஷ் அரைசதம் விளாச, கோல்கட்டா அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ், 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (7), குயின்டன் டி காக்(1) ஜோடி மோசமான துவக்கம் கொடுக்க, 16/2 ரன் என திணறியது.
பின் கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி இணைந்தனர். கம்மின்ஸ், ஷமி பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரஹானே, சிமர்ஜீத் சிங் பந்திலும் சிக்சர் அடித்து மிரட்டினார். இவருக்கு சூப்பர் 'கம்பெனி' கொடுத்தார் ரகுவன்ஷி. ஷமி பந்தில் பவுண்டரி, சிமர்ஜீத் பந்தில், சிக்சர் என விளாசினார். இந்த ஜோடி 51 பந்தில் 81 ரன் எடுத்த போது, ரஹானே (38), அவுட்டானார்.
ரகுவன்ஷி அரைசதம்
ரகுவன்ஷி 43 ரன் எடுத்த போது, ஜீஷான் பந்தில் கொடுத்த கேட்ச்சை, நிதிஷ் குமார் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய இவர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். பிரிமியர் தொடரில் இவரது இரண்டாவது அரைசதம் இது. அதே வேகத்தில் ரகுவன்ஷி (50), கமிந்து மெண்டிஸ் பந்தில், ஹர்ஷல் படேலின் 'சூப்பர்' கேட்ச்சில் அவுட்டானார்.
வெங்கடேஷ் அபாரம்
வெங்கடேஷ், ரிங்கு சிங் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கம்மின்ஸ் வீசிய 19 வது ஓவரில் வெங்கடேஷ். 3 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. வெங்கடேஷ் 25 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 29 பந்தில் 60 ரன் (ஸ்டிரைக் ரேட் 206.89) எடுத்து ஹர்ஷல் பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் ரசல் (1) ரன் அவுட்டாக, கோல்கட்டா அணி 20 ஓவரில் 200/6 ரன் குவித்தது. ரிங்கு சிங் (32) அவுட்டாகாமல் இருந்தார்.
எளிய வெற்றி
கடின இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வைபவ் அரோரா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த அபாயகரமான ஹெட் (4), 2வது பந்தில் அவுட்டானார். அபிஷேக் சர்மாவை (2), ஹர்ஷித் வெளியேற்றினார். மீண்டும் வந்த வைபவ், இஷான் கிஷானை (2) வீழ்த்த, ஐதரபாத் அணி 9/3 ரன் என தள்ளாடியது. நிதிஷ் குமாரும் (19) நிலைக்கவில்லை.
நரைன் பந்தில் கமிந்து மெண்டிஸ் (27) அவுட்டானார். கிளாசன் 33, கம்மின்ஸ் 14 ரன் எடுத்தனர். ஐதராபாத் அணி 16.4 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.
நரைன் '200'
'டி-20' அரங்கில் ஒரு அணிக்காக 200 விக்கெட் சாய்த்த இரண்டாவது பவுலர் ஆனார் சுனில் நரைன். கோல்கட்டா அணிக்காக இவர் இம்மைல்கல்லை எட்டினார். முதலிடத்தில் சமித் படேல் (208, நாட்டிங்காம்ஷயர்) உள்ளார். கிறிஸ் உட் (199, ஹாம்சயர்), மலிங்கா (195, மும்பை), டேவிட் பெய்ன் (193, கிளவ்செஸ்டர்ஷயர்) அடுத்து உள்ளனர்.
30 பந்து, 78 ரன்
கோல்கட்டா அணி நேற்று ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 122/4 ரன் மட்டும் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் வெங்கடேஷ், ரிங்கு சிங் ரன்மழை பொழிய, 78 ரன் எடுக்கப்பட்டன. 20 ஓவரில் 200/6 ரன் குவித்தது.
மேலும்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை