பட்டாசுக்கு தடையை தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு

1

புதுடில்லி, :டில்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால், இங்கு பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது; பட்டாசு வெடிக்கவும் தடை உள்ளது.

இந்நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர், தடையை தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

டில்லியில் பெரும்பாலான மக்கள் தெருக்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர். அனைவராலும், வீடுகளில் காற்று சுத்திகரிப்பானை வாங்கி வைக்க முடியாது. கடந்த ஆறு மாதங்களாக, டில்லியில் காற்றின் தரம் மோசமாகவே இருந்து வருகிறது.

நல்வாழ்வு என்பது அனைவரின் உரிமை என்கிறது அரசியலமைப்பு. அப்படி என்றால், மாசு இல்லாத சூழலில் வாழும் உரிமையும் இதில் அடங்கும்.

பசுமை பட்டாசுகளால் குறைந்த அளவே காற்று மாசு ஏற்படுகிறது என நீதிமன்றம் திருப்தி அடையும்வரை, பட்டாசுக்கான தடையை தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement