குடோன் உரிமையாளரை தாக்கிய ஊ.தலைவர் கணவர் மீது புகார்

குன்றத்துார், குன்றத்துார் மேத்தா நகரை சேர்ந்தவர் மதன், 54. பா.ஜ., பிரமுகர். இவர், குன்றத்துார் அடுத்த இரண்டாம்கட்டளை ஊராட்சி, ராகவேந்திரா நகரில், ஸ்கிராப் குடோன் நடத்தி வருகிறார்.

இங்கு, பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு வந்து பிரித்து, அதை ஏற்றுமதி செய்து வருகிறார்.

குடியிருப்புக்கு மத்தியில் குடோன் இயங்குவதற்கு, அப்பகுதிவாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இரண்டாம்கட்டளை ஊராட்சி தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த சாந்தாதேவியின் கணவர் சுகுமார், அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு குடோனுக்கு சென்று, குடோனை மூட வேண்டும் என, நோட்டீஸ் வழங்கினர்.

குடோன் உரிமையாளர் மதன், நோட்டீசை வாங்க மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், சுகுமார், பாக்யராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து, மதனை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில், மதன் புகார் அளித்தார். மேலும், தன்னை சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக, மதன் மீது சுகுமாரும் புகார் அளித்தார்.

இந்த இரு புகார்களையும் பெற்ற குன்றத்துார் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement