த.வெ.க., மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் தள்ளுமுள்ளு

நங்கநல்லுார்,
நங்கநல்லூர், தில்லை கங்கா நகர், நான்காவது பிரதான சாலையில், த.வெ.க., சென்னை புறநகர் இளைஞரணி மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. திறப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் பங்கேற்றார்.

அவர் வருவதற்கு, 15 நிமிடங்கள் முன்பாகவே, மாவட்ட செயலர் சரவணன் தலைமையில், கட்சியினர் செண்டை மேளத்துடன் சாலையில் நின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தாமல் வழிவிட்டு நிற்கும்படி, ஆதம்பாக்கம் போலீசார் கூறியதால், த.வெ.க., தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின், த.வெ.க.,வினர் ஒதுங்கி நின்றனர். சற்றுநேரத்தில் வந்த பொதுச் செயலர் ஆனந்த், கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், தண்ணீர் பந்தல் திறந்து, 200 நபர்களுக்கு பிரியாணி, புடவை வழங்கப்பட்டது. அப்போது, 200 துாய்மைப் பணியாளர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.

Advertisement