திருவிழா கூட்டத்தில் செயின் பறித்த தெலுங்கானா பெண்கள் கைது

எண்ணுார்,எண்ணுார், சிவன்படை வீதி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா, 80. பிப்., 23ம் தேதி நடந்த அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.

அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்.

எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் அறிவுறுத்தலின்படி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே, செயின் பறிப்பில் தொடர்புடைய பெண்கள் சுற்றித்திரிவாக, தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார், நான்கு பெண்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த சாந்திசெல்வி, 20, சுகுணா, 55, அஞ்சலை, 57, அவரது மகள் வசந்தி, 42, என தெரிந்தது. அவர்களிடமிருந்து, இரண்டு சவரன் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் சென்னை வரும் பெண்கள், திருவிழா மற்றும் கும்பாபிஷேக விழாக்களில், வசதியான வீட்டு பெண்கள் போல் பங்கேற்று, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணைக்கு பின், நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement