பங்கு சந்தை நிலவரம்

டிரம்ப் அறிவிப்பால் அதிர்ந்த சந்தை



இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதன் காரணமாக, அமெரிக்கா தவிர்த்து, உலகளாவிய சந்தை போக்குகள் சரிவுடன் காணப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போது, இந்திய சந்தை குறியீடுகள்

இறக்கத்துடன் துவங்கின.



பரஸ்பர வரி விதிப்பால், அதிகம் பாதிப்பை சந்திக்கும் தகவல் தொழில்நுட்பம், வாகனத்துறை மற்றும் வைர, ஆபரணங்கள் ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிவை கண்டன. மாறாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன.

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 2,806 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரலுக்கு 3.68 சதவீதம் குறைந்து,
72.19 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 85.30 ரூபாயாக இருந்தது.

Advertisement