சாலையில் தீ பிடித்து எரிந்த வேன் 

ஆவடி, ஆவடியை அடுத்த திருநின்றவூர், பாபுஜி நகரைச் சேர்ந்தவர் பவித்ரன், 24. இவர், சில தினங்களுக்கு முன், 'எச்சர்' வேன் வாங்கியிருந்தார். சாஸ்திரி நகரில் சர்வீஸ் செய்ய விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, சர்வீஸ் முடிந்து, வேனை ஓட்டி பார்க்க எடுத்து சென்றார். பட்டாபிராம், காந்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வேன் முன்பகுதியில் கரும்புகை வெளியேறி, தீ பிடித்து எரிந்தது.

அதிர்ச்சி அடைந்த பவித்ரன், வேனை விட்டு வெளியே ஓடி வந்தார். அதற்குள் டிரைவர் கேபினில், தீ கொழுந்து விட்டு எரிந்தது.

அருகில் இருந்தவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ விபத்தில், வேன் முன்பகுதி முழுதும் கரும்புகையால் நாசமானது.

முதற்கட்ட விசாரணையில், 'வயரிங்'கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement