வீட்டு 'காலிங்பெல்' அடித்து செயின் பறிக்க முயன்றவர் கைது

மதுரவாயல் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, மதுரவாயலில் 1,200 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் 10வது தளத்தில் ஒரு வீட்டில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளரான ரோகித், 48, அவரது மனைவி மனிஷாராணி, 40, வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம், இவரது வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டு, மனிஷா ராணி கதவை திறக்க முயன்றபோது, வாலிபர் ஒருவர் கதவை பிடித்து இழுத்துள்ளார்.

சுதாரித்த மனிஷாராணி, கதவை மூட முயன்றபோது, அந்த வாலிபர் அதை தடுத்ததோடு, மனிஷாராணி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது அவர் தாக்கியதில் மனிஷாராணி கையில் காயம் ஏற்பட்டது.

எனினும், அந்த வாலிபரை சமாளித்த மனிஷா ராணி, சாமர்த்தியமாக கதவை அடைத்தார். இதையடுத்து அந்த வாலிபர், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்த புகாரின்படி, வானகரம் போலீசார் விசாரித்து, திருவேற்காடு, கீழ்அயனம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவரை கைது செய்தனர்.

அந்த குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக சதீஷ் காலிங்பெல் அடித்ததும், யாரும் திறக்காத நிலையில் மனிஷாராணி வீட்டு கதவை திறக்கவும், அவரிடம் செயின் பறிக்க முயன்றதும், அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement