பைக் நிறுத்துவதை தடுக்க கயிறு கட்டி தடுப்பு அமைப்பு

தாம்பரம்,
தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இரும்புலியூரில் இருந்து வந்து ஏறும் போது, மேம்பாலத்தில் கீழ் உள்ள அணுகு சாலையின் இருபுறத்திலும், தாம்பரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருவோர், தங்களுடைய கார், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி செல்கின்றனர்.

அந்த வகையில், பல மீட்டர் துாரத்திற்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அச்சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்படுகிறது.

எதிரெதிரே இரண்டு கார் வந்தால், வழிவிடுவதற்கு கூட இடமில்லாமல் சிக்கிக்கொள்கின்றன என, சில வாரங்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, போக்குவரத்து போலீசார், அணுகு சாலையில், 'நோ பார்க்கிங்' என்ற எச்சரிக்கை பலகை வைத்து, வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர். அப்படியிருந்தும், மீண்டும் வாகனங்கள் நிறுத்துவது தொடர்கிறது.

இதனால், நிரந்தர நடவடிக்கையாக, தாம்பரம் போக்குவரத்து எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் போலீசார், நேற்று அணுகு சாலையில் கயிறு கட்டி, வரிசையாக இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.

அதையும் மீறி வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement