காவல் நிலைய பராமரிப்பு தொகையை திரும்ப பெற்றதால் போலீசார் புலம்பல்

சென்னை, காவல் நிலையங்களில் துாய்மை பணி, பினாயில், துடைப்பம் வாங்குவது, துாய்மை பணியாளர்கள் ஊதியம், மின் விளக்கு, பேப்பர் உள்ளிட்ட எழுது பொருட்கள் ஆகியவற்றை, பொருளாகவோ, பணமாகவோ முக்கிய பிரமுகர்கள் அல்லது புகார்தாரரிடம் கேட்டு வாங்குவதை, போலீசார் வழக்கமாக வைத்திருந்தனர்.

இது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால், 7 ஆண்டுக்கு முன், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும், மாத பராமரிப்பு தொகை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்திற்கு, 8,000 ரூபாய், குற்றப்பிரிவு மற்றும் மகளிர் காவல் நிலையத்திற்கு, தலா 4,000 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டது.

அந்தந்த காவல் நிலைய தலைமை காவலர், செலவு செய்த ரசீதுகளை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு, ஏழு மாத பராமரிப்பு தொகையை சேர்த்து, மார்ச் 30ம் தேதி, அந்தந்த இன்ஸ்பெக்டர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

ஏப்ரல் 1ம் தேதி, அந்த பணத்தை, துணை கமிஷனர் அலுவலகம் வழியாக, நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதனால், செலவு செய்த பணம் கிடைக்கவில்லை என, போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போலீசார் கூறியதாவது:

காவல் நிலைய அன்றாட பராமரிப்பு செலவுகளை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர்கள் பங்கிட்டு செய்தோம்.

ஒரு காவல் நிலையத்திற்கு, 56,000 ரூபாய் வரை வந்தது. இந்த பணத்தை நம்பித் தான் ஒவ்வொருவரும், தங்கள் பணத்தை போட்டு செலவு செய்தோம்.

மாதந்தோறும் தரவேண்டிய பணத்தை, ஏழு மாதம் தராமல் இழுத்தடித்தனர். நிதியாண்டு முடிந்தபோது, மொத்த பணத்தையுமா தந்தனர். துணை கமிஷனர் அலுவலகம், மறுநாளே அதையும் திரும்பப் பெற்று கொண்டது.

காவல் நிலைய பராமரிப்பு செலவை, மக்களிடம் வசூலிக்கக் கூடாது என்று தான் அரசு பணம் தருகிறது.

கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதால், மீண்டும் மக்களிடம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, செலவு செய்த பராமரிப்பு தொகையை திருப்பி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement