பி.பி.எப்., நாமினி புதுப்பித்தல்: இனி கட்டணமில்லை

புதுடில்லி:பி.பி.எப்., எனும் பொது வைப்பு நிதி கணக்குகளில், புதிய நாமினிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள நாமினிகள் குறித்த தகவல்களை புதுப்பிக்கவோ கட்டணம் வசூலிக்கப்படாது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இந்த சேவைக்கு தற்போது கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பொது வைப்பு நிதி கணக்குகளில் புதிய நாமினிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள நாமினிகளை நீக்கவோ அல்லது அவர்கள் குறித்த தகவல்களை புதுப்பிக்கவோ, கட்டணம் வசூலிக்கப்படுவதை அகற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி சட்ட திருத்த மசோதா 2025ன் கீழ், வாடிக்கையாளர்கள், தங்களது டிபாசிட் மற்றும் லாக்கர் கணக்குகளுக்கு, நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எப்., எடுப்பது எளிதாகிறது

ஆன்லைன் வாயிலாக பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான முறையில், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கிக்கணக்கு விபரங்களை பதிவேற்றும் நடைமுறையை இ.பி.எப்.ஓ., நீக்கி உள்ளது. தற்போது ஆவணங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட காரணங்களால், பணத்தை பெறுவதற்கு, 13 நாட்கள் வரை ஆகும் நிலையில், இனி விரைவாக பணம் எடுக்க வழி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறையால், ஒப்புதலுக்காக காத்திருக்கும் 14.95 லட்சம் உறுப்பினர்கள் உடனடியாக பயன் பெறுவர்.

Advertisement