துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை:''துாத்துக்குடி அனல் மின் நிலைய தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுஉள்ளது,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, சட்டசபையில் நேற்று, எம்.எல்.ஏ.,க்கள், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ஜவாஹிருல்லா, கடம்பூர் ராஜு ஆகியோர், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - மனோஜ் பாண்டியன்:
துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள, 'ஸ்டேஷன் சர்வீஸ் ஸ்விட்சர்' வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக, விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் கோடிக்கணக்கில் இருக்கிறது என, அங்குள்ளவர்கள் சொல்கின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்தும், சேத மதிப்பீடு குறித்தும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: துாத்துக்குடி அனல் மின் நிலைய சேதம் குறித்து, மார்ச் 17ம் தேதி நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன; எதனால் பாதிப்பு ஏற்பட்டது; வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பரிந்துரைகள் வழங்குவதற்காக, குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மனோஜ் பாண்டியன்: மின் விபத்தால் துாத்துக்குடியில், 6.6 கிலோவாட் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, இதுவரை சேத விபரங்களை மதிப்பீடு செய்யவில்லை. மதிப்பீடு செய்தால்தான் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியும். மின்சாரம் முழுமையாக துாத்துக்குடி மக்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

விரைவாக உயர்மட்ட குழு வாயிலாக சேத மதிப்பீட்டை கண்டறிந்து, சீரான மின் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த நான்கு ஆண்டுகளில் அனல் மின் நிலையங்கள் மேம்பாட்டு பணிகளுக்கு, 869 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. துாத்துக்குடியில் மட்டும், 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், அதிகளவில் மின் உற்பத்தி செய்து, சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து. விரைவாக கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அங்குள்ள மூன்றாவது அலகில் உற்பத்தி துவங்கியுள்ளது. விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement