17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை:''அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் வைத்து, 17 மாவட்டங்களில், புதிதாக, 50 குறு வட்டங்கள் உருவாக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் வைத்து, சென்னை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 50 புதிய வருவாய் குறு வட்டங்கள் உருவாக்கப்படும்

 செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில், 25 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும்

 தாலுகா அளவில், வருவாய் துறை நிர்வாகத்தை வலுப்படுத்த, 26 புதிய துணை தாசில்தார் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்

 கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், மனை இல்லாத பயனாளிகளுக்கு, பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை பத்திரம் வழங்கப்படும்

 எஸ்டேட், இனாம் ஒழிப்பு சட்டங்களின் கீழ், நிலவரி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், தகுதி வாய்ந்த, 10,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்

 கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில், ஆறு வருவாய் கிராமங்களில், நில அளவை பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில், 31,117 பேருக்கு பட்டா வழங்கப்படும்

 ராணிப்பேட்டை, சிவகாசி, பொள்ளாச்சி, பவானி பகுதியில், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் அமைந்துள்ள, 4 பாரம்பரிய கட்டடங்கள், 14 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்

 மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகம்; நீலகிரி மாவட்டம் கூடலுார், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்; தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்; கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம்; திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா அலுவலகங்கள், 28.90 கோடி ரூபாயில் கட்டப்படும்

 துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 27 புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள், 9.45 கோடி ரூபாயில் கட்டப்படும்

 தேனி, திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நில அளவை உதவி இயக்குநர் அலுவலகங்கள், சென்னை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அலுவலக கட்டடம் ஆகியவை, 71.90 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப்படும்

 பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக, மாநில, தேசிய, பன்னாட்டு நிபுணர்கள், ஆராய்ச்சி அமைப்புகள், கல்வியாளர்கள் கருத்துகளை பெற வசதியாக, புதிதாக, 'கருத்தியல்' தளம் உருவாக்கப்படும்

 கல்லுாரிகளில் இளங்கலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பேரிடர் மேலாண்மை பாடம் அறிமுகப்படுத்தப்படும்

 பட்டா மாறுதல் பணிகளை விரைவாக மேற்கொள்ள, 3,078 நில அளவை பணியாளர்களுக்கு, 15.60 கோடி ரூபாய் மதிப்பில், 'லேப்டாப்' வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement