கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'

சென்னை:''கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது சாத்தியமற்றது,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - அப்துல் வஹாப்: நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி, நீர் நிலை புறம்போக்கு நிலங்களிலும், ஹிந்து சமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட இடங்களிலும், நீண்ட காலமாக குடியிருப்போருக்கு பட்டா மறுக்கப்படுகிறது.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போரை, அங்கிருந்து அகற்றுவது சிரமம். எனவே, மக்கள் நலன் கருதி, விதிவிலக்கு அளித்து பட்டா வழங்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:
கோவில் நிலங்கள், 'மைனர் சொத்து' என்ற வகையில் உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டா வழங்குவது சாத்தியம் அல்ல. ஏற்கனவே பட்டா வழங்க முயற்சித்த போது, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பட்டா வழங்க தடை விதித்துள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்த போது, 2010ல், கோவில் இடங்களில் குடியிருப்போரை, குழு ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வாடகைதாரர்களாக ஏற்றுக்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த அறநிலையத்துறை தயாராக உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement