மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள டன் கணக்கிலான குப்பை கழிவு, மாநகராட்சி ஊழியர்களே தீயிட்டு எரிப்பதால், சுற்றுப்புறம் வசிக்கும் நகரவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள வீடுகள், வணிக கட்டடங்களில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
சேகரிக்கப்படும் குப்பை கழிவின் எடைக்கு ஏற்ப, தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்குகிறது. அந்த வகையில், ஒரு நாளைக்கு 70 டன்னுக்கு மேலாக குப்பை சேகரித்து அகற்றப்படுகிறது.
மக்கும், மக்காத குப்பை என, மக்களிடம் தரம் பிரித்து வாங்குகின்றனர். மக்கும் குப்பை உரமாகவும், மக்காத குப்பை சிமென்ட் ஆலைகளுக்கு மறுசுழற்சிக்கு வழங்கப்படுகிறது.
குப்பை சேகரிப்புக்கு மாதந்தோறும் 70 லட்சம் ரூபாய்க்கு மேலாக, தனியாருக்கு வழங்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, மாநகராட்சியில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அவற்றை தரம் பிரித்து, முறையாக அகற்றப்படுவதில்லை.
மாறாக, நத்தப்பேட்டை, திருக்காலிமேடு போன்ற இடங்களில், 21 ஏக்கர் பரப்பளவில், டன் கணக்கில் மலை போல் குப்பை கொட்டி குவிக்கப்படுகிறது.
இவ்வாறு குவிக்கப்படும் குப்பையை, அவ்வப்போது யாராவது தீயிட்டு கொளுத்துவதால், சுற்றியுள்ள நத்தப்பேட்டை, அய்யம்பேட்டை, வையாவூர், திருக்காலிமேடு, திருவீதிபள்ளம் போன்ற பகுதிகளில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
இரு மாதங்களாக, அவ்வப்போது குப்பை எரிக்கப்படுவதால், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு, பகுதிவாசிகள் ஆளாகின்றனர்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்காத குப்பை கழிவை, சிமென்ட் ஆலைகளுக்கு சரிவர வழங்காத காரணத்தாலேயே, டன் கணக்கில் மலை போல் குவிக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக குப்பை சேருவதால், அவற்றை கணக்கில் கொண்டுவர மாநகராட்சி விரும்புவதில்லை. அதனால், மாநகராட்சி ஊழியர்களே சிலர், குப்பை கிடங்கிற்கு அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இப்படி, தொடர்ச்சியாக அவர்கள் தீயிட்டு எரிப்பதால், கிடங்கைச் சுற்றியுள்ள வசிப்பிடங்களில், புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
இதனால், அங்கு வசிப்போருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
ஏற்கனவே, அளவுக்கு அதிகமாக குப்பை தேங்கி வரும் நிலையில், அவற்றை உடனுக்குடன் 'பயோமைனிங்' முறையில் அகற்ற, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வெயில் கொளுத்தி வருவதால், இதுபோன்ற தீ விபத்து அடிக்கடி நேரலாம். அப்படி நேர்ந்தால், கிடங்கைச் சுற்றி வருவோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குப்பை கிடங்கு எரிவது பற்றி நாங்களும் விசாரித்து வருகிறோம். மாநகராட்சி ஊழியர்கள் யாரும் குப்பையை எரிப்பதில்லை. சுற்றியுள்ள இடங்களில் வசிப்போரில் யாராவது குப்பையை எரித்து விடுகின்றனர்.
மேலும், மக்காத குப்பையை சிமென்ட் நிறுவனங்களுக்கு கொடுக்க, 10 டன் கழிவை தயார் செய்துள்ளோம். அதேபோல் சிமென்ட் நிறுவனங்களிலும் மக்காத குப்பையை, கடந்த நாட்களில் பெறாமலேயே இருந்தனர்.
இப்போது, நிறுவனங்களுக்கு வழங்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம். குப்பை எரிவதை தடுக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருக்காலிமேடு குப்பை கிடங்கு, 2021ல் தீப்பற்றி எரிந்தது. அப்போது, உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என கண்டித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், 93 லட்சம் ரூபாயை, மாநகராட்சிக்கு அபராதமாக விதித்தது. இந்த தொகையே இன்னமும் மாநகராட்சி நிர்வாகம் செலுத்தாத நிலையில், கடந்த பிப்., மாதம் முதல் வரை, குப்பை கிடங்கில் அவ்வப்போது தீப்பற்றி எரிவது தொடர்கிறது.
மேலும்
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்