போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று ஆண்டுகளில் 50,072 பேர் கைது கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தகவல்

சென்னை,:''தமிழகத்தில், மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்களில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, 50,072 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என, அமலாக்கப் பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில், போதைப் பொருட்களை ஒழிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும், 'ரீல்ஸ்'கள் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

அமலாக்கப் பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ், விழிப்புணர்வு குறும்படங்கள், பாடல் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:

கடந்த பிப்ரவரியில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசு, 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 50,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 25,000 ரூபாய், ஆறுதல் பரிசாக, 20 பேருக்கு தலா, 1,000 ரூபாயும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தற்போது, இப்போட்டி மாநில அளவில் நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க, வரும், 30ம் தேதிக்குள், dftn2025@gmail.com என்ற இ - மெயிலுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டும்.

சிறந்தவையாக, 25 குறும்படங்கள், ரீல்ஸ்கள் தேர்வு செய்யப்படும். அவற்றில், மிகவும் சிறந்தவையாக மூன்று குறும்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்படும்.

மீதமுள்ள, 22 குறும்படங்கள் மற்றும் ரீல்களுக்கு, தலா, 10,000 ரூபாய் வழங்கப்படும்.

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, அமலாக்க பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறை வாயிலாக இரண்டு குறும்படங்கள், ரீல்ஸ் மற்றும் பாடல் தயாரித்து வெளியிட்டுஉள்ளோம்.

கடந்த 2022ல் இருந்து மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்களில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, 34,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 50,072 பேர் கைதாகினர். 76,938 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 4,911 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என 2,117 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்திற்கு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, அம்மாநில போலீசாருடன் இணைந்து, கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

மெத்ஆம்பெட்டமைன் உள்ளிட்ட, 'சிந்தட்டிக்' போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement