தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி எப்போது?

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இரண்டு கால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.

இக்கோவில் கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவில் விமான கோபுரம் மிகவும் சிதிலமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.

சிதிலமடைந்த நிலையிலான இக்கோவிலை புதுப்பிக்க அப்பகுதியினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, இக்கோவிலை புதுப்பிக்க அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும், இதுவரை கோவில் சீரமைப்பு பணி துவங்கப்படாமல் உள்ளது. எனவே, விரைவாக புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த தேவராஜன் கூறியதாவது,

இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தியதன்படி, கோவில் புனரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணி மேற்கொள்வதற்கான டெண்டர் பணிகளும் முடிவுற்றுள்ளது.

அறநிலையத் துறை வழங்க வேண்டிய பணிக்கான உத்தரவை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பாலாலயம் செய்யப்பட்டு, விரைவில் திருப்பணி துவங்கப்படும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement