கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அமுதரசு ஆஜர்


கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அமுதரசு ஆஜர்


நாமக்கல்:சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த இன்ஜினியர் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே, ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் உள்பட, 16 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல், சென்னை, மதுரை நீதிமன்றங்களில் இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்தது. இறுதியாக, மதுரை மாவட்ட தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நீதிமன்றம், யுவராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய, ஏழு பேர் விடுதலையாகினர்.
கோகுல்ராஜ் கொலையில், யுவராஜூக்கு அடைக்கலம் கொடுத்ததாக, 17வது நபராக ஈரோடு மாவட் டம், பெருந்துறையை சேர்ந்த கொங்கு புலிப்படை அமைப்பின் தலைவர் அமுதரசை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர். இவருடைய வழக்கு மட்டும், நாமக்கல் மாவட்ட
எஸ்.சி., எஸ்.டி நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்த அவர், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். ஏப்.,8ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார்.
நிருபர்களிடம் அமுதரசு கூறுகையில்,'' கோகுல்ராஜ் கொலையில், யுவராஜூக்கு நான் அடைக்கலம் கொடுத்தேன் என்ற வகையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் என் மீது வழக்குப்
பதிவு செய்துள்ளனர். நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தவறான தகவலின்பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கருதுகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறேன். என் மீது குற்றமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்,'' என்றார்.

Advertisement