பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தை சேர்ந்தவர் உத்தரகுமார் மகன் மணிகண்டன், 30; அதேபகுதி, திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், வேலை செய்கிறார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பணியில் இருந்த போது, பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், பெட்ரோல் போடக்கூறி, தகராறில் ஈடுபட்டு மணிகண்டனை தாக்கினர். அங்கிருந்த ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்ட இருவரை மடக்கிப்பிடித்தனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில், அவர்கள் இருவரும் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணங்காரகுப்பத்தை சேர்ந்த சீதாராமன் மகன் விக்னேஷ், 23; தனியார் நிறுவன ஊழியர், மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவபாலன், 23; எல்.எல்.பி., மாணவர் என தெரிந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். தப்பி சென்ற வடிவழகன் மகன் கலைச்செல்வன், 20; என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement