தடய அறிவியல் துறையில் அடிப்படை வசதிகளுக்கு ஒரு தடயமும் இல்லை: அரசு மருத்துவக்கல்லுாரியில் போலீசார் அலைக்கழிப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி தடய அறிவியல் துறையில் பிரேத பரிசோதனை அறிக்கை பெற வரும் போலீசாருக்கு உரிய அடிப்படைகள் வசதிகள் செய்து தராமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் தினமும் 10 முதல் 15 பிணக்கூராய்வு நடக்கிறது. மருத்துவக் கல்லுாரி தடய அறிவியல் துறையில் மதுரை உட்பட தென்மாவட்ட போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையும், அதன் பின் எப்.ஓ.சி., எனப்படும் இறுதிநிலை சான்றிதழையும் பெற்று வருகின்றனர். தடய அறிவியல் துறையில் இருந்து ஒரு சான்றிதழ் பெற குறைந்தது 7 முறை வந்து செல்வதாகவும் அடிப்படை வசதி இல்லை எனவும் போலீசார் வேதனை தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒவ்வொரு முறை உள்ளூர், வெளியூரில் இருந்து வரும் போது டாக்டர் லீவில் இருப்பார், அல்லது துறை பணியாளர்கள் விடுப்பில் சென்றிருப்பர். இருவரும் இருந்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். ஓராண்டுக்கு முன்பு வரை அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் சான்றிதழ் பெற முடிந்தது. தற்போது ஒரு மாதம் வரை அலைய வேண்டியுள்ளது. தடய அறிவியல் துறை முற்றிலும் குளிரூட்டப்பட்ட வளாகமாக இருந்தாலும், நாங்கள் வெளிப்பகுதி காரிடாரில் காத்திருக்க வேண்டும். ஒரு மின்விசிறி கூட இல்லை.

வெயிலில் அலைந்து உள்ளே வரும் போது வியர்வையால் மூச்சு முட்டுகிறது. லிப்டின் முன்புற வராண்டாவில் இரண்டு மின்விசிறிகள் இருந்தாலும் அதையும் பயன்படுத்துவதில்லை.

ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை வியர்வையுடன் காத்திருக்க வேண்டும். வரவேற்பறை பணியாளர்கள் அந்தந்த தாலுகா பெயரைச் சொல்லி கூப்பிட்டால் அவர்கள் முன்பாக நின்று கொண்டே கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். தாகம் தீர்க்க தண்ணீர் வசதி கூட இல்லை.

எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது. மனிதாபிமான முறையில் கல்லுாரி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இதுகுறித்து கமிஷனர் லோகநாதன், டீன் அருள்சுந்தரேஷ்குமாரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement