குளிக்க தண்ணீரின்றி குமுறும் மக்கள்

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் பொது குளியல் தொட்டிக்கு பயன்படுத்தும் மோட்டார் பழுதாகி 30 நாட்களுக்கு மேலாகியும் சரி செய்ய மறுப்பதாக ஒன்றிய அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.

கச்சிராயன்பட்டியில் ஊராட்சி அலுவலகம் அருகே ரூ.5 லட்சத்தில் போர்வெல் அமைத்து குளியல் தொட்டி கட்டப்பட்டது. இத் தொட்டியை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தினர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் மோட்டார் பழுதானது. அதன்பின், குளிக்க வழியின்றி மக்கள் தண்ணீரைத் தேடி அலைகின்றனர். கடும் வெயிலுக்கு, குளிக்க தண்ணீர் இல்லாததால் அம்மை போன்ற வெப்ப நோய்கள் தாக்கும் அபாயத்தில் உள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.

அப்பகுதி மணிவேல் கூறியதாவது: மோட்டார் பழுது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சரி செய்யவில்லை. பாசி படர்ந்த குளங்களில் குளிப்பதால் அரிப்பு, தோல் நோய் ஏற்படுகிறது. சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறோம். இன்று துவங்கும் திருவிழாவின் போது குளிக்க தண்ணீர் இல்லாதது மன உளைச்சலாக உள்ளது. இனியாவது அதிகாரிகள் மோட்டாரை பழுது நீக்கி தண்ணீர் தர வேண்டும் என்றனர்.

Advertisement