பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் தவிப்பு

மேலுார்: மேலவளவில் கிராமத்திற்கு பொதுவான மாடுகளை பராமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் கண்டுகொள்ளாததால், கால்நடைகள் பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது.

மேலவளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வேப்பனேரி, பரம்பு, ஒடுங்கான், செல்லி உள்ளிட்ட கண்மாய்கள் உள்ளன. இக் கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை கடலை பயிரிட்டுள்ளனர். இப் பயிர்களை ஊராட்சியின் 8 கிராமங்களுக்கு பொதுவான மாடுகள் பகல், இரவு நேரங்களில் வயலுக்குள் புகுந்து உண்பவதால் பயிர்கள் பாதிப்படைகிறது.

விவசாயி சிதம்பரம் கூறியதாவது: கிராமங்களில் பொது மாடுகளை கட்டிப்போட்டு, உணவளித்து, பராமரிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம் மாடுகளை பராமரிக்கும் விவசாயிகள் சாகுபடி காலம் மட்டும் கட்டிப்போட்டு பராமரிக்கின்றனர். மற்ற நேரங்களில் கட்டிபோடுவதில்லை.

அதனால் அம்மாடுகள் விவசாயிகள் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ. 22 ஆயிரம் செலவில் சாகுபடி செய்த பயிர்களை மேய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே அதிகாரிகள் மாடுகளை கட்டிப்போட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

தாசில்தார் செந்தாமரை கூறுகையில், மாடுகளால் பயிர்கள் பாதிப்பு குறித்து தற்போது தெரிய வருவதால், பராமரிப்போர் மூலம் கட்டிப்போட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Advertisement