'போதை' அடிமையாகும் சிறுவர்கள்

மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு எளிதில் அடிமையாகும் இளைஞர்கள் பலர், வாழ்க்கைப் பாதை மாறி, சமூக விரோதிகளாக உருவெடுக்கின்றனர்.

இவ்வாறு, சமீப காலமாக, பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர்களும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

பல்லடத்தில், சமீபத்தில் நடந்த திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களே அதிகம் ஈடுபட்டு கைதாகினர். கடந்த மூன்று நாள் முன் நடந்த அடிதடி சம்பவங்களில் கூட, 17 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் கைதானது குறிப்பிடத்தக்கது.

கைதான சிறுவர்கள் மது, கஞ்சா அருந்தி இருந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர்களும் கூட மது, போதைக்கு அடிமையாகி, வாழ்க்கையை இழப்பதுடன், சமூக விரோதிகளாகவும் மாறி வருகின்றனர்.

பள்ளி செல்லும் வயதில் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது. எதிர்கால சமுதாயத்துக்கு இது நல்லதல்ல என்பதால், போதை பழக்கத்துக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement