பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு

18

ராமேஸ்வரம்; புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை(ஏப்.,6) ராமேஸ்வரம், பாம்பன் வருகிறார். மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுகின்றனர்.


ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.


பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.


ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின் காரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். ராமநவமியான நாளை ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்கிறார்.


பின் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார். நிகழ்ச்சிகள் மதியம் 2:30 மணிக்கு முடிந்ததும் மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார்.


பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Advertisement