சிவகங்கை கலெக்டர் ஏப். 21ல் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை : ஜாதி மோதலில் கொலையானவரின் மகனுக்கு வேலை கோரிய விவகாரம் தொடர்பாக சிவகங்கை கலெக்டர் ஏப்., 21ல் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி தாக்கல் செய்த மனு: கச்சநத்தத்தில் கோயில் திருவிழா விரோதத்தில் 28.5.2018ல் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் இரவில் 30க்கும் மேற்பட்டோர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த என் கணவர் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தார். என் மகன் சுகுமாறன் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இக்கொலை வழக்கில் 27 பேருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2022-ல் தண்டனை விதித்தது.

ஜாதி மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் என் மகன் கோபாலகிருஷ்ணனுக்கு அரசு வேலை கேட்டு சிவகங்கை கலெக்டரிடம் விண்ணப்பித்தோம். கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி என் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர். அதை ரத்து செய்து மகனுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. சிவகங்கை கலெக்டர் ஏப்., 21 ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement