ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது

லண்டன்:உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக்கின் பங்களிப்புகளுக்காக, பிரிட்டனில் அவருக்கு ' தி ப்ரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருது' வழங்கப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக், மணற்சிற்பத்தில் சிறந்து விளங்குபவர், இவர் ஏற்கனவே பெரிய மணல் கலைக்கான கின்னஸ் சாதனை, 2014-ல் பத்மஸ்ரீ , காலநிலை மாற்றம் குறித்த கலைப்படைப்புகளுக்காக ஐ.நா., விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தின் டோர்செட் கவுண்டியில் உள்ள வெய்மவுத்தில் நேற்று தொடங்கிய 2025 சர்வதேச மணல் கலை விழாவில் சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார். ​​50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மணற்சிற்ப கலைஞர்கள் தனது கலைப்படைப்புகளை வெளிப்படுத்தினர்.

"உலக அமைதி" என்ற செய்தியுடன் விநாயகர் சிலையின் 10 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியதன் மூலம் பட்நாயக் மற்றொரு மைல்கல்லை எட்டினார். அவருக்கு 'தி ப்ரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருது' அறிவிக்கப்பட்டது.இந்த விருது உலகளாவிய மணல் கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட மணல் சிற்பங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. பிரிட்டனில் மணல் சிற்பி விருதைப் பெற்ற முதல் இந்திய கலைஞரானார் சுதர்சன் பட்நாயக்.

விருது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.மணல் கலை ஒரு உலக மொழி. அதைக் கொண்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

Advertisement