ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு

3

பன்வேல்: மஹாராஷ்டிரவில் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய பெண் போலீஸை கொலை செய்த வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரியை குற்றவாளி என பன்வேல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2016ம் ஆண்டு கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் அஸ்வினி பித்ரே என்பவர் நவி மும்பையில் தனியாக வசித்து வந்தார். இவர், உதவி காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கர் என்பவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பித்ரே, அபய் குருந்த்கரை வற்புறுத்தியுள்ளார்.

இதனால், கோபமடைந்த அபய் குருந்த்கர், பித்ரேவை கொலை செய்து சடலத்தை பெட்டியில் போட்டு ஆற்றில் தூக்கி போட்டுள்ளார்.

இதையடுத்து, 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பித்ரேவை காணவில்லை என்று அவரது சகோதரர் பன்வேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், செல்போன் உரையாடல் பதிவு உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததன் அடிப்படையில், 2017ம் ஆண்டு அபய் குருந்த்கரை போலீசார் கைது செய்தனர். அதே ஆண்டில் தான் ஜனாதிபதியின் வீரதீர செயலுக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த பன்வேல் செசன்ஸ் கோர்ட், அபய் குருந்த்கரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், தடயங்களை அழிக்க உதவியதாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் ஏப்.,11ம் தேதி வெளியிட இருப்பதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement