அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

47

சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தி.மு.க., அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருந்து வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக, நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.


இவர்களது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணம் வரவு செலவு தொடர்பான விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்றனர்.


தங்களிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, 5 மணி நேரம் நீடித்தது. இதன் முடிவில், ரவிச்சந்திரன் வீடு திரும்பினார்.

Advertisement