கும்பாபிஷேக பணிகள் தீவிரம் இன்று முதல் மூலஸ்தானம் செல்ல தடை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்களுக்கான பாலாலயம் ஏப். 9ல் நடப்பதையொட்டி இன்று (ஏப். 7) மாலை முதல் மூலஸ்தானம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிப். 10ல் ராஜகோபுரம், வல்லப கணபதி, பசுபதீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, உப கோயில்களின் விமானங்களுக்கு பாலாலயம் நடந்து திருப்பணிகள் நடந்து வருகிறது.

இரண்டாம் கட்டமாக மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் ஏப். 9ல் பாலாலயம் நடக்க உள்ளது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.

ஏப். 7 மாலை முதல் ஜூலை 14 ல் கும்பாபிஷேகம் முடியும் வரை மூலஸ்தானம், மகா மண்டபங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்ப்பட்டுள்ளது.

அத்திமர சிற்பங்கள்



கோயிலில் தாய் பாறையில் செதுக்கப்பட்டுள்ள மூலவர்கள், சன்னதிகளில் திருப்பணிகள் நடக்க உள்ளதால் மூலவர்களின் உருவங்கள் அத்தி மரத்தில் சிற்பங்களாக தயாரித்து, மூலவர்களின் சக்தி கலையேற்றம் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் எழுந்தருளச் செய்யப்படுவர். அங்கு ஆகம விதிப்படி மூலவர்களின் மர சிற்பங்கள், மூலவர்களாக பாவிக்கப்பட்டு தினமும் மூலஸ்தானத்தில் நடந்ததுபோல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் நடக்க உள்ளது. கும்பாபிஷேகம் முடியும் வரை சண்முகம் சன்னதியில் எழுந்தருளும் தற்காலிக மூலவர்களின் மரச் சிற்பங்களை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆகம விதிகளும் கடைப்பிடிக்கப்பட்டு பூஜை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்ம தேவன், ராமையா தெரிவித்தனர்.

Advertisement