காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்

பெ.நா.பாளையம்; தடாகம் வட்டாரத்தில் குட்டிகளுடன் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம், கால்நடை தீவனம், வேளாண் பயிர்களை சேதப்படுத்தின.

கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், இரவு நேரங்களில் புகும் காட்டு யானைகளால், வேளாண் பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட, வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், யானையால் பயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி வருகிறது. சின்னதடாகம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் மூன்று குட்டிகளுடன் கூடிய பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் புகுந்தது. அங்கு கால்நடை தீவனத்துக்காக பயிரிடப்பட்டிருந்த கம்பு, நேப்பியர் புற்களை காட்டு யானைகள் மேய்ந்தன. வேளாண் பயிர்களையும் சேதப்படுத்தின. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஒலி எழுப்பியும், டார்ச் விளக்குகள் அடித்தும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement