பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் அவசர மனு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

6

நியூயார்க்:இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த அவசர மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள 64 வயதான ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான்.

நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. நாடு கடத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாடு கடத்த தேவையான உத்தரவுகளை பிறப்பித்து விட்டார்.
கடைசி முயற்சியாக, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கு சித்ரவதை செய்யப்படக்கூடும்; எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தான்.

அந்த மனுவும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் நீதிமன்றம் சுக்குநூறாக்கியது. விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement