துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்

6

சென்னை: ''தமிழகத்தில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.



அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.


மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை கவர்னர்கள் விருப்பம் போல கிடப்பில் போட்டு வைக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது; எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதிகபட்சமாக 4 மாதங்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதல்வர் தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement