ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருநெல்வேலி : ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி கே.டி.சி.நகரில் வசிக்கும் முருகன் 40, வீடு கட்டினார். அப்பணியை துாத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த சுடலைமணி மேற்கொண்டார்.

அப்போது முருகன், சுடலைமணியிடம் தமக்கு ரயில்வே துறை உயரதிகாரிகளின் தொடர்பு இருப்பதால் யாருக்காவது ரயில்வேயில் வேலை வேண்டுமானால் கூறுங்கள் என்றார். சுடலைமணியும் அதை உண்மை என நம்பி தங்கை மகன், நண்பர்கள் விக்னேஷ் , பிரபுக்கு வேலை பெறுவதற்காக மூவரும் சேர்ந்து ரூ.42 லட்சம் கொடுத்தனர். பணத்தை வங்கிக் கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் கொடுத்தனர். பணத்தை வாங்கிக் கொண்ட முருகன், மனைவி மீனா, ரயில்வே பணிக்கு உத்தரவு வந்திருப்பதாக கூறி ஒரு கடிதத்தை கொடுத்தனர். அந்த கடிதத்தை எடுத்துச் சென்று ரயில்வேயில் கேட்ட போது அது போலியான கடிதம் என தெரிய வந்தது. இது குறித்து சுடலைமணி திருநெல்வேலி தாலுகா போலீசில் முருகன், மீனா மீது புகார் அளித்தார். போலீசார் நேற்று முருகனை கைது செய்தனர். மீனாவை தேடி வருகின்றனர்.

Advertisement