வேலியில் பாய்ந்த மின்சாரம் மூன்று பேர் உயிரை பறித்தது

நாமக்கல் : மோகனுார் அருகே, கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து பாட்டி, பேரன், பேத்தி ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், 60, மனைவி இளஞ்சியம், 50. இவர்களின் மகன் அருள், 35.

இவரது மகன் சுஜித், 5, மகள் ஐவிலி, 3. அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்த செல்வம், பருத்தி, சோளம் சாகுபடி செய்துள்ளார்.

நேற்று காலை, வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச இளஞ்சியம், தன் பேரன், பேத்தியுடன் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்து மாலை, 3:30 மணிக்கு இளஞ்சியம், சுஜித், ஐவிலி ஆகியோர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த கம்பி வேலியில், நேற்று பெய்த மழையால் மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதையறியாத மூவரும், கம்பி வேலியை பிடித்தபோது, மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள், மூவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மோகனுார் போலீசார், மூவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

Advertisement